Saturday, 17 February 2018

ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி 20ல் இன்று மோதல்: சுரேஷ் ரெய்னா மீது அதிக எதிர்பார்ப்பு


டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி பழைய கதையாகிவிட்ட நிலையில் டி 20 தொடரையும் இந்திய அணியே வெல்லக்கூடும் என்ற சாதகமான சூழ்நிலையே உருவாகி உள்ளது. சுழல் கூட்டணியான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருடன் தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் சித்ரவதை செய்ய இந்திய அணி தயாராகிவிட்டது. வானவில் நாடு என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க மண்ணில் டி 20 கிரிக்கெட் ஆட்டம் இந்திய அணிக்கு சில மறக்க முடியாத பசுமையான நினைவுகளை கொடுத்துள்ளது. கடந்த 2006-ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரே டி 20 ஆட்டம் கொண்ட தொடரை இந்தியா வென்றிருந்தது.
இதன் பின்னர் அடுத்த ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதும் தென் ஆப்பிரிக்க மண்ணில்தான். 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணி பத்து டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் 7 ஆட்டங்களில் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் குறுகிய வடிவிலான இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்களை சிறப்பாகவே நிலைநிறுத்திக் கொள்வார்கள். டி 20 தொடருக்கான அணியில் ராகுல், சுரேஷ் ரெய்னா, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேவேளையில் டி 20 கிரிக்கெட்டில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். 3 ஆட்டங்களில் விளையாடிய அவர், ஒரு அரை சதம் உட்பட 104 ரன்கள் சேர்த்தார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய ரெய்னா 442 ரன்கள் குவித்த போதிலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியில் ரெய்னாவுக்கு இடம் வழங்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த தேர்வில் ரெய்னா வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய அணிக்குள் கால்பதித்துள்ளார். விளையாடும் லெவனில் ரெய்னா எளிதாகவே இடம் பெறுவார். எனினும் அவரது செயல்திறன் முக்கியத்துவம் பெறும். நேர்த்தியான திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே ரெய்னா தனக்காக இடத்தை அணியில் தக்கவைக்க முடியும். அடுத்த மாதம் இலங்கையில் முத்தரப்பு டி 20 தொடர் நடைபெறுவதால் அதையும் கவனத்தில் கொண்டு ரெய்னா சிறந்த பங்களிப்பை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெய்னா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பெறக்கூடும். ஏனெனில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு 4-ம் நிலையில் களமிறங்கும் பேட்ஸ்மேனை அடையாளம் காண்பதற்கான பணியில் இந்திய அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த இடத்துக்கு ஆல்ரவுண்டரான ரெய்னா பொறுத்தமாக இருப்பார். இதனால் களத்தில் ரன்கள் சேர்ப்பதில் ரெய்னா தீவிரம் காட்டும் பட்சத்தில் தனக்கான இடத்தை அணியில் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.